Karur Stampede: விஜய் பரப்புரை முதல் 40 பேர் மரணம் வரை - கரூரில் நடந்தது என்ன? கலெக்டர் பேட்டி
கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை முதல் 40 பேர் உயிரிழந்தது வரை என்ன நடந்தது என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் நேற்று நடந்த தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
தீவிர சிகிச்சை:
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நடந்தது. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சியில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் இந்த சம்பவத்தால் இறந்ததும் அனைவருக்கும் துயரத்தை அளித்துள்ள செய்தியாகும்.
இந்த செய்தி அறிந்ததும் முதலமைச்சர் உடனடியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நகராட்சி அமைச்சர். இயற்கை வள அமைச்சர், கூட்டுறவு அமைச்சர், கரூர் எம்எல்ஏ உள்பட அனைத்து அலுவலர்களையும் முடுக்கிவிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் காயம்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டது.
சடலமாக கொண்டு வரப்பட்ட மக்கள்:
சம்பவ இடத்தில் இருந்து 39 பேர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர். இன்று சிகிச்சையில் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். இது மிகவும் துயரமான செய்தியாக உள்ளது. முதலமைச்சர் இரவோடு இரவாக இந்த செய்திகளை கேள்விபட்டு இறந்த குடும்பத்தினருக்கும் நிவாரணமும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணமும் அளித்துவிட்டு திண்டுக்கல், திருச்சி ஆட்சியர்களை கரூர் மாவட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
நிவாரணம்:
கரூர் மாவட்டத்திற்கு சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள் உள்பட அனைத்து குழுக்களையும் அனுப்பி வைத்தார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் 220 மற்றும் 115 செவிலியர்கள் உள்பட மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையிலும், கரூர் அரசு மருத்துவமனையிலும் 110 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும் நிவாரணம் அளித்து அறிவித்தார்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரூர் வருகை தந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாருக்கேனும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அந்த அறையை தொடர்பு கொள்ள இங்கும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை:
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிர உத்தரவு, ஆணைகளின் படி முதலமைச்சர், துணை முதலமைச்சர் கட்டளையின்பேரிலும் அனைத்து சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சியால் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டது. தேவைப்படும் மருந்து,. மாத்திரைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு சிகிச்சை முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.





















