கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியான மூன்று தொழிலாளர்களின் உறவினர்கள் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணி மலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 23, தோரணங்கள் பட்டியைச் சேர்ந்த சிவகுமார் வயது 35 ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழுவு நீர் தொட்டி முடிக்கப்பட்டு சிமெண்ட் பூச்சுகள் முடித்து இருந்தனர்.
இதில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தத் தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி இரண்டு பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கின்ற ராஜேஷ் என்பவர் அவர்கள் இரண்டு பேரையும் மீட்க முயன்று உள்ளார். இதில் அவரும் விஷவாயுத்தாக்கி மயக்கமடைந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தான்தோன்றி மலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனம், போலீஸ் துணைசூப்பிரண்ட் தேவராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தின.
இதற்கிடையே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பலியான மூன்று பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டி என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்