கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை தனிநபர் ஒருவர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வடக்கு பாளையம் கிராமத்தில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1996 - 2001ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை செயல்பட்டு வந்தது. இதற்குப் பின்புறம் திமுக தாந்தோணி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது. 


 




மேலும், பேருந்து நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் காலி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து நிழற்குடை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு பாளையம் பகுதி கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 




இந்த போராட்டத்தின் போது கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட வந்தனர். அப்போது கிராம மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் பேருந்து நிழற்டையை புதிதாக அமைத்து தருவதாக கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


 


 




கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் தொடர்ந்ததால் கரூர் நகரத்திற்குள் வேலைக்கு வருபவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகி ஒருவர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிறுத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண