"நான் எப்படி மாடிக்கு போனேன், எப்படி குதித்தேன் என தெரியவில்லை” - கரூரில் அதிர்ச்சி சம்பவம்
எதற்காக மாடியிலிருந்து குதித்தார் என்பது குறித்து பள்ளி நிர்வாகம் தான் தெரிவிக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.
கரூரில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் - திண்டுக்கல் சாலையில் ராயனூரை அடுத்த ஆச்சிமங்களத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ராஜேஷ்கண்ணா என்பவரின் 13 வயது மகள் ஸ்ரீநிதி அப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் 3.40 மணியளவில் ஸ்ரீநிதி பள்ளியின் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை பார்த்த ஊழியர்கள் மாணவியை மீட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பெற்றோருடன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
எதற்காக மாடியிலிருந்து குதித்தார் என்பது குறித்து பள்ளி நிர்வாகம்தான் தெரிவிக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர். மாணவி தான் எப்படி மாடிக்கு போனேன், எப்படி குதித்தேன் என தெரியவில்லை என பெற்றோரிடம் தெரிவித்தாக கூறினர்.
இதுகுறித்து மருத்துவமனையில் உடனிருந்த அவரது தாயிடம் கேட்டபோது: எனக்கு அலைபேசி மூலம் பள்ளி நிர்வாகம் தகவல் தந்ததுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது திரும்பி பள்ளிக்கு வந்து விட்டேன். என் மகளுக்கு எது நடந்தாலும் அது பள்ளி நிர்வாகமே பொறுப்பு பள்ளி ஆசிரியைகள் அஜாக்கிரதை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனது மகளின் கால் & இடுப்பு பகுதி முழுவதுமாக செயல் இழந்து உள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நாம் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, மாணவி நன்கு படிக்கக்கூடிய பெண் என்பதும் இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது கரூர் அருகே உள்ள ஆட்சிமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணை முடிவிலேயே பள்ளிகளில் நடந்தது என்ன என்பது பற்றி விரிவாக தெரிய வரும்.