கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தலூர் ஊராட்சி பகுதிகளான 288 தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இறந்த நபர்கள் மற்றும் சுமார் 247 விவசாயிகள் பெயரில் போலியாக பட்டா, சிட்டா தயார் செய்து பயிர் கடன் பெற்றுள்ளதாகவும் பல கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நங்கவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் கவிதா, பொறுப்பு செயலாளராக 288 தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் சுமார் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயர்களில், அடுத்தவர்களின் விவசாய நிலத்தை குத்தகைதாரர்களாக பெயர் மாற்றம் செய்து பட்டா, சிட்டா தயார் செய்து கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்களுடன் பல கோடி அளவில் சுமார் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியுள்ளதாக பணம் பெற்றுள்ளனர்.
பயிர் கடன் திரும்ப செலுத்தாததால் அனைவருக்கும் வங்கி மூலமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டதில் அனைத்து விவசாயிகளும் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் எந்த விதமான கடன் பெறவில்லை என்றும், எங்களின் நிலத்தின் பெயரில் போலியாக பட்டா, சிட்டா தயார் செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, கடன் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியும், இறந்தவர்களின் பெயர் நிலத்தில் போலி ஆவணங்கள் தயார் செய்து ஒரு நபர் அதிக அளவில் பயிர் கடன் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேற்றும், இன்றும் அழைத்துள்ளனர்.
விசாரணைக்கு வந்தவர்களை விசாரணை செய்யாமல் கூட்டுறவு அலுவலர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளதாக குற்றம் சாட்டி சுமார் 50 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். விவசாயிகள் கடன் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் அனைவரும் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பொறுப்பு கவிதா தற்காலிக பதவி நீக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணைக்காக குளித்தலை கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சுமார் 50 விவசாயிகளை வரவழைத்து விசாரணைக்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை இட்டு உள்ளனர்.