கரூரில் நான்கு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டது.




                 
கரூர் அடுத்த சுக்காலியூர், காந்திநகர் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மோகன்ராஜ், சிவக்குமார், ராஜேஷ்குமார், கோபால் ஆகிய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், புதிய கட்டிடம் கட்டுமான பணிக்காக கரூர் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் பணி நடைபெற்றதால், 15 நாட்களுக்குள் கட்டிடத்தை இடித்து அகற்றவும், இல்லையெனில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 




மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இடைநிலை உத்தரவுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.




விஷ வண்டு தாக்கியதில் 5 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.




 


குளித்தலை அருகே பிள்ளாபாளையம், அந்தரப்பட்டியில் விஷவண்டு தாக்கியதில் 5 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையத்தில் தனி நபருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலித் தொழிலாளிகள் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர்.


அப்போது மோட்டார் பம்பு செட் அருகே உள்ள பலாமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் திடீரென அங்கு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்தது. இதில் பிள்ளாபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரசு(60), வனஜா (42), கற்பகம் (45), தங்கையன்(60), பெருமாள்(65) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.


இவர்கள் ஐந்து பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதே போல் அந்தரப்பட்டியில் 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த புனவாசிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (30), ராஜலிங்கம்  (65), தவமணி (45) ஆகிய மூன்று பேரும் விஷ வண்டு தாக்கியதில் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பிள்ளாபாளையம், அந்தரப்பட்டியில் விஷ வண்டுகள் தாக்கிய 8 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




கர்ப்பப்பை சிகிச்சைக்கு போனவர் காலை பறிகொடுத்த பரிதாபம்


ராமேஸ்வரம் பார்த்தலோமை மகள் மேரி ஜூட் ஷீலா. இவருக்கு கரூர் தனியார் நிறுவன டிரைவர் மணிகண்டனுடன் திருமணம் நடந்தது. மேரி ஜூட் ஷீலா தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மேரி ஜூஸ் சீலாவுக்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.  


அறுவை சிகிச்சை பின்னர் தன் வலது காலில் வலியுள்ளதாக மேரிஜூட் ஷீலா கூறியதை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் வலது கால் புண்ணாகி கிருமி தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது வலது கால் அகற்றப்பட்டது. இது தொடர்பாக மேரி  ஜூட் ஷீலா  கூறும் போது, கரூர் தனியார் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால்  வலது காலை இழந்துவிட்டேன். முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.