திமுக ஆட்சியில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என குறை கூறும் எதிர்க்கட்சியினர் செய்தித்தாள்களையும், ஊடகங்களையும் படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்தித்து பேசுகையில், “திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று விமர்சனம் கூறக்கூடிய எதிர்க்கட்சியினர் செய்தித்தாள்களையும், ஊடகங்களையும் தினசரி படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.




ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருக்கிறார். கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையம் பத்து மாதங்களுக்குள் பணிகள் முடிந்து கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு புறநகர் பேருந்து நிலையமாகவும், பயன்பாட்டில் உள்ள கரூர் பேருந்து நிலையம் நகர பேருந்துகள் இயங்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளன.




கரூரில் இன்று மட்டும் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.




அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் ரூபாய் 11 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகலிமலை திருக்கோயில் அடிவாரத்தில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையும், புகலூர் நகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையும், அஞ்சூர் அழகு நாச்சியம்மன் கோவில் பஞ்சாயத்து சாலை உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையும் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.