அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு.


அமராவதி அணையிலிருந்து புதிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் காலை முதல் வினாடிக்கு 440 கன அடி வரை திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 69. 26 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்தது. 


 



 


மாயனூர் கதவணை.


காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 20.50 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குடிநீர் தேவைக்காக அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. நான்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


ஆத்துப்பாளையம் அணை.


கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 15.35 கன அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 



 


குறைந்து வரும் நிலத்தடி நீர்.


க.பரமத்தி வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் குறைந்து வரும் நிலத்தடி நீர் க.பரமத்தி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பருவ மழை பெய்ய தவறி விட்டதால் கடந்த மாதங்களாக குடிநீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால் தானிய பயிர்கள், பணப்பயிர்கள் விளைவிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிணற்று பாசனம் முற்றிலும் பொய்த்து விட்டதால் தென்னை மரங்கள் 50 சதவீதத்திற்கும் மேல் காய்ந்து விட்டது. போதிய தண்ணீர் கிடைக்காததால் கால்நடைகளும் விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்று விட்டனர். காய்கறிகள் தற்போது விவசாய குடும்பங்கள் வாங்கி வருகின்றனர். கடந்த சில தினங்களாக காற்று பலமாக வீசி வருவதால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து வருகிறது. 


 



 


காவிரி ஆற்றின் மூலம் பல கிராமங்களில் சப்ளை செய்யப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை. இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கிடைத்து வந்தனர். தற்போது அது போதுமான அளவு கிடைப்பதில்லை. தண்ணீர் நாளுக்கு நாள் மட்டும் வெகுவாக குறைந்து வருகிறது. வறட்சிக்கு இலக்கான பகுதியாக இருப்பதால் விவசாயிகள் தற்போது கிராமத்தை விட்டு நகர பகுதிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.


ரயில்வே குகை வழிபாதையில் தேங்கும் நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி.


கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில்  ஊற்று நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுதும் ரயில்வே கேடுகளை, நிரந்தரமாக மூடவும், விபத்துகளை தவிர்க்கவும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட்பகுதியில், குகை வழிப்பாதை  அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் கரூர் தொழிற்பேட்டை- சனப்பிரட்டி  இடையே குகை வழிப்பாதை சமீபத்தில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு 20 அடி பள்ளத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 24 மணி நேரமும் உற்று நீர் வெளியேறி, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ளது.


இதனால், அந்த வழியாக, சனப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள ஊற்று நீரை, மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குகை வழிப் பாதையில், இரண்டு பக்கமும் மின்விளக்குகள் சரிவர எறிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் இந்த வழியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சுவரில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் உதிர தொடங்கியுள்ளன. எனவே, கரூர் தொழிற்பேட்டை – சனப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகை வழிப்பாதையில் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது.