கரூரில் கோயில் நிலப் பிரச்சனை தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கூடியிருந்த ஆண்கள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 50க்கும் மேற்பட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், கைதாக மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பதாக கோவில் நில மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் என்பவர், பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இனாம் நிலங்கள் என்றும், அதன் மூலம் பெறப்பட்ட ரயத்துவாரி பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்து செய்ததை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.