கரூரில் சாலை ஓரமாக கிடந்த 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் அசல் ஆவணங்களை காவல் நிலையத்தில் வைத்து பணத்தை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைத்தனர்.


 


 




கரூர் தொழில் நகரமாகவும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படக்கூடிய இடமாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் நாள்தோறும் ஏராளமான வணிக நிறுவனங்களில் இருந்து பல்வேறு வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்று வரும் நிலையில் கரூரில் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை பற்றி நாம் தற்போது விரிவாக காணலாம்.


 




 


கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அவருடைய பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார்.


 


 




இதனை அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த லியாகத் உசேன் அன்சாரி என்பவர் எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் திருவேங்கடத்தை காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்டு தவறவிட்ட அவரது ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்த லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் உதவியாளர் நாகராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர். 


 


 




தவறவிட்ட பணத்தை அரை மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொண்ட முதியவர் திருவேங்கடம் காவல்துறை மற்றும் பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த நபருக்கு நன்றி தெரிவித்தார். முதியவர் விடுபட்ட தொகையை கரூரைச் சேர்ந்த அன்சாரி என்பவர் மூலம் காவல் நிலையத்தில் பணம் மற்றும் ஆவணத்தை ஒப்படைத்து தொடர்ந்து பயனாளிகளிடம் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 




 


இக்காலங்களில் சிறிய தொகை கிடைத்தால் கூட அதனை தனது தேவைக்காக பயன்படுத்தும் நிலையில் முதியவர் ஒருவர் 50,000 ரூபாய் தொகை தொலைந்த நிலையில் உடனடியாக அதனை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த அன்சாரி என்பவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வண்ணம் உள்ளன.