ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கரூரில் நடந்த இனாம் நில உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 


 




 


இனாம் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறையும், வக்பு வாரியமும் அபகரிக்கும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இனாம் நில மீட்பு மாநாடு கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி சிறப்புரையாற்றினார்.


 


 




 


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசிய பொழுது,  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கர்நாடக மாநிலத்தில் விடுபட்ட உழவர்கள், வீடு, மனை நில உரிமையாளர்களுக்கு இனாம் ஒழிப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்தி பட்டா வழங்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதேபோல ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  இனாம் ஒழிப்புசட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.


 


 




 


ஆனால், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள சில தவறான அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களால் முதல்வரும், இந்து அறநிலைத்துறை அமைச்சரும் செயல்பட்டு வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு 2007 இல் பத்திரப்பதிவு சட்டம் 22 ஏ-வில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம், இனாம் நிலங்களுக்கு பொருந்தியது என சட்ட திருத்தம் செய்ய வேண்டும். தற்பொழுது இனாம் சொத்துக்களின் மீது நடைபெற்று வரும் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்ய வேண்டும்.


 


 




 


மின்சாரம், குடிநீர் இணைப்பு மாநில திட்டங்கள் உட்பட அனைத்து அரசு சேவைகளையும், தங்கு தடை இன்றி இனாம் நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கும், விவசாயம் செய்து வருபவர்களுக்கும் முன்பு இருந்ததைப் போலவே வழங்கிட வேண்டும். நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வரும் இந்து சமய அறநிலைத்துறை உடனடியாக தன்னுடைய சட்டவிரோத முயற்சிகளை கைவிட வேண்டும். தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகளையும் நீக்கிவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து பேருந்துகள் மூலம் கரூர் விழா அரங்கத்திற்கு திரளாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.