கரூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க நிலம் கையப்படுத்த உரிய இழப்பீட்டு தொகை தரவில்லை எனக் கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


 




கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை 110 kv தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமலும், நில மதிப்பு நிர்ணயம் செய்யாமலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, பனைமரம், வேளாம் மரம், வேப்பமரம், முருங்கை மரம், கொழுக்கட்டை புல், கிளுவை  உயிர்வேலி மற்றும் காய்கறி செடிகளுக்கான இழப்பீடு வழங்காமல் சட்ட விரோதமாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதனை கண்டித்தும், இழப்பீடு வழங்க வேண்டியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தனது தோட்டத்தில் இழப்பீடு பெறாத  பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 21ம் தேதி தொடங்கியுள்ளார். 


 




 


முறையான இழப்பீடு பெறாத விவசாயிகள் தென்னிலையை சார்ந்த ராஜா, சீத்தக்காட்டை சார்ந்த கலையரசி, மீனாட்சிவலசை சார்ந்த ராதாமணி, வேலாயுதம்பாளையத்தை சார்ந்த சின்னசாமி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள், விவசாய அமைப்பினர், தன்னார்வலர்களும் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர். 


 




 


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட 14 ஆவணங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காட்ட வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், மதுரை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியும், அதை சமர்ப்பிக்காமல் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் செயல்படுவதாக கோரிக்கை மனுவினை அழித்துவிட்டு வெளியே வந்த ஈசன் முருகசாமி தெரிவித்தார்.