கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டன.


 


 




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2016ம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறையாக தேர்தல் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் அறை எண் 14ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 


 


 




2017ம் ஆண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் எதுவும் மேல் முறையீடு செய்யப்படாததாலும் அந்த பாதுகாப்பு கிடங்கினை திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 10 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான தங்கமேல் தலைமையில் அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அறையிலிருந்த 738 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 246 கட்டுப்பாட்டு கருவிகள் அடங்கிய பெட்டிகளை வெளியில் எடுத்து வரப்பட்டு அதனை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 


 


 




 


இதன் பிறகு இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழைய மாடல் என்பதாலும், தற்போது இதை விட புதிய மாடல் இயந்திரங்கள் வந்து விட்டதால் இவற்றை நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த முடியாது என்றும், உள்ளாட்சி தேர்தல்களில் வேண்டும் என்றால் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.