கரூரில் செல்லப்பிராணியான நாய் காணாமல் போன நிலையில் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் - ஜெயபிரபா தம்பதியினர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். 6 வயதுடைய அந்த நாய்க்கு மேக்ஸ் என்று பெயர் வைத்து தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டின் அருகில் நடைப்பயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கேட்டை பூட்டாமல் இருந்த காரணத்தால், நாய் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றனர். கடைசியாக நாய் தொலைந்து போன போது, கருப்பு நிற பெல்ட் அணிந்து இருந்ததாகவும், தங்களது செல்லப்பிராணியை கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு விடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்ட நாயின் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.