அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு.. கண்டனத்துக்குரியது - எம்பி ஜோதிமணி
பெண்களுக்கு எதிராக கண்ணியமற்ற முறையில் தரமற்ற விஷயங்களை மிக நிச்சயமாக பேசக்கூடாது. அது கண்டனத்துக்குரியது - கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூரில் பேட்டி.

அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல அரசியலில் உள்ள யாருமே பெண்களுக்கு எதிராக, கண்ணியமற்ற முறையில் தரமற்ற விஷயங்களை மிக நிச்சயமாக பேசக்கூடாது. அது கண்டனத்துக்குரியது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் நிறைவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, எம்பி ஜோதிமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்புகையில், அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல அரசியலில் உள்ள யாருமே பெண்களுக்கு எதிராக, கண்ணியமற்ற முறையில் தரமற்ற விஷயங்களை மிக நிச்சயமாக பேசக்கூடாது. அது கண்டனத்துக்குரியது என்று பதிலளித்தார்.





















