பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி 



கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனை பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 535 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்று திறனாளிகளிடம் இருந்து 75 மனுக்கள் பெறப்பட்டது.




 


 



மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யோக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்கும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 




 


அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 7 நபர்களுக்கு ரூ 34, 993 மதிப்பில் காதொலி கருவிகளையும், 3 நபர்களுக்கு ரூபாய் 22,950 மதிப்பில் மூன்று சக்கர வண்டிகளையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 540 மதிப்பில் ஊன்றுகோலும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டம் போத்துராவுத்தன் பட்டியை சேர்ந்த சாந்திக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குளித்தலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜதுரை என்பவருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணையையும், மாவட்டம் முன்னோடி வங்கி சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் தையல் இயந்திரம் வழங்குவதற்காக வங்கி கடன் உதவியும், தாட்கோ திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு கனரா வாகனம், கறவை மாடுகள், கடைகள் ஆகியவைகளும் ரூ 62,50,829 மானியத்துடன்  கடனுதவிகளுக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 64,09,312 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


 


 





இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் வாணிஸ்வரி, சீனிவாசன், தனி துறை ஆட்சியர் சைபுதீன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். வாரந்தோறும் திங்கள்கிழமை நாட்களில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்த்த நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்களை அழித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வழக்கத்தை விட அதிக அளவு பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டரிடம் தங்கள் பகுதியில் நிலவிவரும் பிரச்சனைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுத்து சென்றனர். வழக்கத்தை விட அதிக அளவு மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்ததால், அலுவலக வளாகம் காலை முதல் மாலை வரை பரபரப்புடன் காணப்பட்டது.