கரூரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வீட்டு கழிவறையில் தடுக்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பூட்டை உடைத்து உள்ளே சென்று சடலத்தை போலீசார் மீட்டனர்.


 


 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் TNHB காலனியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் கரூர் ஆசாத் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.


 




 


மேலும், வீட்டின் முன்பக்க கதவு மற்றும் உள்பக்க கதவும் பூட்டப்பட்டிருந்ததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டு கழிவறையில் தடுக்கி குப்புற விழுந்தபடி சடலமாக கிடந்துள்ளார். 


 




 


 


அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சதாசிவத்திற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஒரு மகள் உள்ளார். இரண்டு மனைவிகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு, நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டு கழிவறையில் சடலமாக கிடந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.