கரூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஓயாமல் உழைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், அடக்கமுறையை கையாளும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் நோ என்ட்ரி என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
“தமிழ்நாட்டை காக்கும் அரண் ‘திமுக‘ தான்“
கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் ‘திமுக’ மட்டும்தான் எனவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை என்றும், அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார் தெரியுமா.? அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என்று பேசினார். அந்த கைப்பாவை ஆட்சியை தூக்கியெறிய திமுகதான் காரணம் என்பதற்காகத்தான், பாஜக நம்(திமுக) மீது வன்மத்தை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்“ என்று கூறினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
“அடக்குமுறைக்கு தமிழ்நாட்டில் நோ என்ட்ரி“
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய பாஜக அரசு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதை பார்த்து முடக்கி விடுவோம் என்று நினைத்தார்கள். திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா.? இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம். 74 ஆண்டுகால வரலாறு இருக்கு நமக்கு. திமுகவை அழிப்போம் என்று சொன்ன கட்சிகள், இப்போதும் திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று பேசும் கட்சிகள் இருக்கின்றன. என்ன மாற்றப்போகிறார்கள்.? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி பின்னால் இழுத்துச் செல்லப்போகிறார்களா.? நம் கொள்கையைவிட சிறப்பான கொள்கையை பேச முடியுமா.?“ என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்தி மொழி திணிப்பு, நீட் தேர்வு, கல்வி நிதியை விடுவிக்க மறுப்பு, கீழடி தொன்மை மறைப்பு என, டெல்லி நமக்கு எதிராக இருக்கிறது. ஆனால், அன்றும், இன்றும் ஒன்றே ஒன்றுதான். ‘அடக்குமுறைக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி’ என திட்டவட்டமாக கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
“மீண்டும் ஒரு உரிமை போர்“
தொடர்ந்து பேசிய அவர், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு முன்னின்று போராடி, எப்படி இந்தியாவையே காப்பாற்றியதோ, அதே மாதிரி ஒரு உரிமைப் போர் நடத்தி, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார்.
மேலும், “மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள் எல்லாம் மறைந்து போய்விட்டார்கள். நமது கொள்கைதான் நமது பலம் எனவும் தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.