MK Stalin Speech: “அடடடடடா, என்ன உணர்ச்சி, என்ன எழுச்சி“; தொண்டர்களை பார்த்து பூரித்துப் போன மு.க. ஸ்டாலின்
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவின்போது மழை பெய்த நிலையில், இருக்கைகளையே குடைகளாக்கி திமுக தொண்டர்கள் நின்றிருந்ததைப் பார்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பூரித்துப் போனார்.

அறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், திமுக உதயமான நாட்களை மும்பெரும் விழாவாக கரூரில் கொண்டாடியது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல், தங்கள் இருக்கைகளையே குடைகளாக மாற்றிய திமுக தொண்டடர்களை பார்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அது குறித்து அவர் பேசியது என்ன.? இப்போது பார்க்கலாம்.
“அடடடடா.. என்ன ஒரு உணர்ச்சி, என்ன ஒரு ஆர்வம்“
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இது முப்பெரும் விழாவா அல்லது விரைவில் நாம் சந்திக்க இருக்கும் வெற்றி விழாவா என்றும், இது கரூர் இல்லை, திராவிட முன்னேற்றக் கழக ஊர் என்று தெரிவித்தார்.
கொட்டும் மழையில் தான், அறிஞர் அண்ணா அவர்கள் இதே நாளில் வட சென்னையில் அமைந்திருக்கும் ராபின்சன் பூங்காவில், கொட்டும் மழையில் தான் கழகத்தை தொடங்கி வைத்தாக மு.க. ஸ்டாலின் கூறினார். அப்படி கொட்டும் மழையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த கழகம், 75 ஆண்டுகள் மட்டுமல்ல, நூற்றாண்டையும் நாம் காணப் போகிறோம் என அவர் கூறினார்.
உங்களிடம் பேசுவதைவிட, இந்த கொட்டும் மழையிலும் உங்கள் எழுச்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறிய மு.க. ஸ்டாலின், என்ன உணர்ச்சி, அடடடடா என்ன ஆர்வம் என்று அங்கு மழையில் நின்றுகொண்டிருந்த தொண்டர்களை பார்த்து கூறினார்.
“திமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்ட முப்பெரும் விழா நடக்கவில்லை“
மேலும், பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு, ஒரு எழுச்சி மாநாட்டையே செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார் மு.க. ஸ்டாலின். அதோடு, கழக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது என தெரிவித்தார்.
கொட்டும் மழையிலும், நீங்கள் எல்லோரும்(தொண்டர்கள்) குடையை பிடித்துக்கொண்டும், நாற்காலிகளை தலையில் வைத்துக்கொண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருப்பதே அதற்கு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.
14 வயதில் கருப்பு சிவப்பு கொடி பிடித்து, கழகம் கழகம் என உழைத்த தன்னை, தொண்டர்களே தலைவராக்கியிருப்பதாகவும், ஓயாமல் உழைக்கும் உதய சூரியன்களான திமுக தொண்டர்களை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது ஒரு புதிய எனர்ஜி வருவதாக குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.
எல்லாவிதமான போராட்டங்களையும் எதிர்கொண்டுதான் தொண்டர்கள் தன்னை தலைவராக ஆக்கியிருப்பதாகவும், அதோடு, மக்களின் ஆதரவோடு, இன்று நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசை உருவாக்கி, தன்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்ததும் நீங்கள்தான்(தொண்டர்கள்) என்று புகழாரம் சூட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின்.





















