குடும்ப பிரச்சனை வழக்கில் கரூர் மாவட்டம் மகளிர் கோர்ட் நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எனக்கும் என் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரிய வழக்கு தீர்ப்பு கோர்ட்டில் நடந்தது. பின்னர் அந்த வழக்கு எனது மனைவி வசிக்கும் கரூர் மாவட்டம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. எங்கள் குழந்தை குறித்து டி.என்.ஏ சோதனைக்கு அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது.




ஆனால் டி.என்.ஏ பரிசோதனைக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை. எனவே, ஒரு தலைபட்ச உத்தரவை பிறப்பியுங்கள் என தாக்கலான எங்களின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. ஆனால் குடும்ப பராமரிப்பு சம்பந்தமாக மற்றொரு வழக்கை அதே கோர்ட்டில் என் மனைவி தாக்கல் செய்தார். சட்டப்படி, அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்த பின்னர் தான் அந்த வழக்கு விசாரணையை தொடர வேண்டும் என்று நான் மனு தாக்கல் செய்தேன். அந்த  மனுவை இதுவரை கரூர் மாவட்ட மகளிர் கோர்ட் விசாரணைக்கு ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட் உத்தரவுகளுக்கு எதிராக கரூர் மாவட்டம் மகளிர் கோர்ட் நீதிபதி ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். அந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ள எங்களின் வழக்கை வேறு கோர்ட்டுக்கு  மாற்றினால் தான், உரிய நீதி கிடைக்கும்.




இது தொடர்பாக உரிய உத்தரவு  பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி விசாரணை கோர்ட் நீதிபதி ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார் என மனதாரர் தெரிவிக்கிறார். அவரது புகாரில் நியாயம் உள்ளது. எனவே ஐகோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கரூர் மாவட்டம் மகளிர் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் மனுதாரர் சம்பந்தப்பட்ட  வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு இந்த மனுவை வருகிற 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.




பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி.


தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 12ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 2 மணி முதல் தொடங்கி நடைபெறும். இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும்  பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, 3-ம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது.




பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படுகிறது. இதே போல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசை ரூ.5000 இரண்டாம் பரிசு ரூ. 3000 மூன்றாம் பரிசு ரூ. 2000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா,  வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள், வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் சம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். கரூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வர் அனவழியாகவும்,கல்லூரி கல்வியினை இயக்குனர் வழியாகவும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் அனுமதியுடனும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும், பேச்சுப் போட்டியில் பங்கேற்ற பயன்படலாம் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.