கரூர் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யானது என உண்மைக்கு புறம்பான தகவல் அளிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.




கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, முன்னாள் வார்டு கவுன்சிலர்கள், அதிமுக பொறுப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாநகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தியதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரிகள் உயர்த்தப்படுவதால் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று அதனை தொடர்ந்து நடந்த சாதாரண கூட்டங்களிலும் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 




இந்நிலையில் தாந்தோணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றும் அலுவலகத்தில் பொய்யாக அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் ஒட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றியதாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால், தீர்மானங்கள் நிறைவேற்றியதில் எந்த தவறும் நடைபெறவில்லை. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, பொய்யான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்.