கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா 2022 குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், “வன வார விழா ஆண்டு தோறும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றோம்.




நாம் இயற்கை சமநிலை உருவாக்கக்கூடிய வகையில் வனங்கள், வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பதனால் மனித குலத்திற்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை விலங்குகள் அழிவதன் காரணமாக உணவு சுழற்சி தடைப்பட்டு, ஒரு வகை விலங்குகள் எண்ணிக்கை கூடுதலாகவும், ஒரு வகை விலங்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் உணவு சுழற்சி தடைப்படுகிறது. குறிப்பாக நமது கடவூர் காட்டுப்பகுதியில் வாழும் அறிய வகை தேவாங்கு விலங்கு விவசாயத்தை அழித்து வரும் பூச்சிகளை உணவாக உட்கொள்வாதல் விவசாயத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு உணவு சுழற்சி நடைபெறுகிறது. ஆகையால் வனங்களையும், விலங்குகளையும் நாம் படிக்கக்கூடிய பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அனைவரும் இன்று முதல் வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.




அதேபோல், அனைத்து மாணவ, மாணவியர்கள் ஆண்டிற்கு ஒரு மரம் வளர்ப்பேன் என்று அனைவரும் உறுதி மொழி இன்று எடுத்துக் கொள்வோம். ஆகையால் கரூர் மாவட்டத்தில் மரம் வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், நெகிழி பயன்படுத்தாமல் அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையால் நெகிழி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். எனவே, அனைவரும் மஞ்சப்பைகளை பயன்படுத்தி நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்க முன் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.




பின்னர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா 2022 குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கிழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பெருமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்க மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, அரசுகலைக்கல்லூரி முதல்வர் கௌசல்யா, வன சரக அலுவலர்கள் முரளிதரன், சசி ஹரிபிரியா, செல்வகுமார், அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (தொடக்கப்பள்ளி), கண்ணிச்சாமி (இடைநிலை), கனகராசு (தனியார்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.