கரூரில் சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் நூற்றுக்கணக்கான சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு திருவிழாவிற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 அரங்குகளில் பல்வேறு குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிறுதானியத்தால் செய்யப்பட்ட அல்வா, பொங்கல், இட்லி, பனியாரம், உருண்டைகள், முறுக்கு, சூப், கஞ்சி என பல வகையான பலகாரங்கள் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர்.
கேரட் தோசை, கேழ்வரகு பக்கோடா, வரகு உருண்டை, கேழ்வரகு அல்வா, சிறுதானிய புட்டு வகைகள், சிறுதானிய பர்பி வகைகள் என பல வகையான பலகாரங்கள் இடம்பெற்றிருந்தன. அரங்கினை ஆட்சியர் தங்கவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்தார்.
அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலரும் பார்வையிட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை இலவசமாக உண்டு மகிழ்ந்தனர்.