கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிளிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவிகள் 15 பேரை கால்பந்து போட்டியில் விளையாட ஆசிரியர்கள் ஜெயசகேவிய எம்ப்பாயுலு, திலகவதி ஆகியோர் ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். 


காலை 10 மணியளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தோல்வியை தழுவியதை அடுத்து அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க வருகை தந்துள்ளனர். மாயனூர் கதவணைப் பகுதியை சுற்றிப் பார்த்த பிறகு சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி சென்றனர். 


ஆற்றின் நடுவே தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மணலில் நடந்து சென்று நடு ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். ஆழமான பகுதி என்பதால் குளித்துக் கொண்டிருந்த மாணவிகளில் 8ம் வகுப்பு மாணவி தமிழரசி, 7ம் வகுப்பு மாணவி சோபியா, 6ம் வகுப்பு மாணவிகள் இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். 


மாணவிகளின் அலரல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் பரிசல் மூலமாகவும்,  தண்ணீரில் இறங்கியும் தேடினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக உடல்கள் மீட்கப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


ஆட்சியர் விளக்கம்


கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "இப்பகுதி ஆபத்தான, ஆழமான, சுழல் நிறந்த பகுதி என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அறியாமல் மாணவிகள் குளித்ததால் இந்த சோக 
சம்பவம் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார். 
 
மேலும் இது முதல்வர் விரிவான அறிக்கை கேட்டு உள்ளதாகவும்,  விரைவில்  இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை அளிக்கப்படும் என்றார்.  பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். மேலும் சக மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவத்துள்ளார்.


பெற்றோர் வாக்குவாதம்


புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த 4 மாணவிகள் உயிரிழந்ததால், அப்பள்ளி முன்பு பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். மேலும், பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களுடன் பெற்றோர், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மயக்கமடைந்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.