அரை நிர்வாணத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேல் சட்டை இன்றி அரை நிர்வாணத்தில் தர்ணா போராட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கொங்குநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் தையல் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது ஒரு கால் போலியோ நோயின் காரணமாக செயல் இழந்த நிலையில், மற்றொரு காலும் தற்போது நரம்புத் தளர்ச்சி காரணமாக முற்றிலுமாக செயல் இழந்து நடக்க முடியாத சூழ்நிலையில் உள்ளார். இந்த நிலையில் தனது இரண்டு கால்களும் செயல் இழந்த தன்மை குறித்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் உரிய சான்றிதழ் தராமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்த அவர், ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி சட்டையை அணிவித்து, ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவியை ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்
கரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதாக கடந்த 25-ம் தேதி பள்ளி வளாகத்தில் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று தலை, கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டு படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவி முதல் மாடியில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்பதற்காக வந்த போது, அவர் மாணவிகளிடம், ஆசிரியரிடமும் விசாரணை மேற்கொண்டதாகவும் தற்போது தனக்கு வேறு ஒரு மீட்டிங் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், லாலாபேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்களை அங்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாருக்கு பதிலாக லாலாபேட்டை காவல்துறை வேறு விதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.