கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பத்துக்கு மேற்பட்டோர் லிப்டில் வந்து கொண்டிருக்கிற பொழுது லிப்ட் தரைத்தளத்தில் பழுதாகி நின்றது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின்பேரில், 40 நிமிடத்திற்கு மேல் உள்ளே சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஐபி லிப்டில் தரை தளத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது லிஃப்ட் தரை தளத்தில் மாட்டிக்கொண்டது.
சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் லிப்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து லிப்டில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக உள்ளே சிக்கிக் கொண்டவர்களை உயிருடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்