கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 2024-ன் காரணமாக கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், அணையின் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும் எனவும், தற்போது அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1,75,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் எனவும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரமும் அதிகரிக்கப்படலாம் எனவும், மேலும், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேட்டூர் அணை 1, ஸ்டேன்லி அணை உபகோட்டம், உதவி செயற்பொறியாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், காவிரி ஆற்றில் அதிகப்படியான நீர்திறக்கப்பட்டு வரும் நிலையில், ஆடி பதினெட்டு மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு எதிர்வரும் 03.08.2024, மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி நீராடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதையோ, கால் நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.