கரூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பணம் எடுப்பதால் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


 




 


கரூர் பழைய பை-பாஸ் சாலையில் எஸ்பிஐ எனும் பாரத் ஸ்டேட் வங்கியின் மெயின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இடப்புறத்தில் பணம் எடுக்கும் இயந்திரம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் பணம் எடுக்கும் இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் அச்சிடும் இயந்திரம் என 6 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 


 


 




 


இந்த அறைகளில் ஏசிகள், சி.சி.டி.விகள் வைக்கப்பட்டுள்ளன. மாநகரின் மையப்பகுதியில் இருக்கும் வங்கி கிளை என்பதால் அதிகளவில் இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் இயங்குவது இல்லை. இதே போன்று ஒரே ஒரு பணம் செலுத்தும் இயந்திரம் மட்டுமே செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இரவு சுமார் 9.30 மணி முதல் ஏ.டி.எம் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் விளக்குகள் எரியாததால் பணம் செலுத்த மற்றும் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், தங்கள் கைகளில் எடுத்து வந்த செல்போனில் டார்ச் லைட்டை எரிய வைத்து வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காவலுக்கு இருக்க வேண்டிய பாதுகாவலரும் இல்லாததால் பணம் செலுத்த வந்தவர்கள் ஒரு வித அச்சத்துடனே இயந்திரத்தில் பணத்தை செலுத்திச் சென்றனர். 


 




 


குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வந்த வாடிக்கையாளர்கள் அச்சத்துடன் அவசரம், அவசரமாக தங்களது வேலையை முடித்து வெளியேறினர். வழக்கமாக இந்த அறையில் ஏசி, மின் விளக்குகள் சரியாக இருக்கும், ஆனால், ஏ.டி.எம் இயந்திரங்கள் செயல்படாது. இன்று மின் விளக்குகள், ஏசி இயங்கவில்லை.