புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் கழிவு நீரால் புஞ்சை தோட்ட புரட்சி பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பு குறித்து கரூர் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.






கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதி வழியாகச் சென்று வாய்க்காலில் கலக்கிறது. புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளான மூர்த்தி பாளையம் ஒரத்தை, அம்மாபட்டி, மலையம்பாளையம் ஆகிய ஊர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.


 




 


காகித ஆலையின் கழிவு நீரானது இங்குள்ள ஓடையில் கலப்பதால் இவ்வூரில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலம் மற்றும் நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. மேலும் இங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


 




 


காகித ஆலை நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். கோட்டாட்சியர் ரூபினா மற்றும் வட்டாட்சியர் முருகன் ஆகியோர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


 




 


அங்குள்ள கிணறு , ஓடை குளம், ஆகியவற்றிலிருந்து நீர் மாதிரிகள் எடுத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பின்னர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.