கரூர்: கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

 

கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Continues below advertisement

 

பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பிரச்சாரத்தில் நடந்தது என்ன?

 

இன்று நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். இதனைப் பார்த்த விஜய் உடனே தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினார். அதன்பிறகு, விஜய் தனது உரையை நிகழ்த்தினார்.

உயிரிழப்பு 34 ஆக அதிகரிப்பு 

விஜய் உரையை முடித்து கிளம்பும் போது, தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.