Karthigai Deepam 2023: ’அரோகரா' கோஷத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.  


கார்த்திகை தீபம் 2023:


தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வானது தமிழ்நாட்டை பொறுத்தவரை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படுவது பிரசித்தி பெற்றது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. 


இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிகழ்வில் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேத மந்திரங்களை முழங்க அரோஹரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


’அரோகரா' கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்:


இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்கு முன்னதாக பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டப எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கும் வைபவம் இடம் பெறுகிறது. 2,668 உயர மலை மீது அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் 25 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  மகா தீபம் காண வந்துள்ள பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழா கோலம் பூண்டுள்ளது. அதே நேரத்தில், கார்த்திகை  தீபத் திருநாளில் பௌர்ணமியும் இணைந்துள்ளதால், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில்  கிரிவலம் சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மகா தீப நிகழ்வு முடிந்தவுடன் இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள், வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் செய்ய வேண்டிய இடங்கள் போன்றவை குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Karthigai Deepam 2023 LIVE: அரோகரா அரோகரா... பக்தர்கள் கோஷத்துடன் திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்: நேரலையில்!