மீனவர் மரணம்
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரிநீர் பிடிப்பு பகுதியான பாலாறு கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்று நான்கிற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாலாற்றில் மீன்பிடித்து உள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அதில் சிலர் தப்பி சென்றுவிட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜாவை காணவில்லை என்பதால் கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்று ஆற்றங்கரையில் தேடினர். மேலும் பாலாறு ஆற்றங்கரையில் இருந்த பரிசல்களையும்,வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் மிதந்து வந்தது. இதனை தமிழ்நாடு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் எஸ்பி விளக்கம்
இந்நிலையில், தமிழக மீனவர் ராஜா உயிரிழந்தது குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "வனவிலங்குகளை வேட்டையாடுவதை மீனவர் ராஜா வழக்கமாக கொண்டிருந்துள்ளார். வனவிலங்குகளை வேட்டையாடும் ராஜாவின் நடவடிக்கையை கண்டித்து அவரது சொந்த ஊரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்றார்.
"எனினும் ராஜா வேட்டைக்கு சென்றதால் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. சுடப்பட்ட ராஜா வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதிற்குள் சென்றபோது தான் துப்பாக்கிச் சூடு நடந்ததாக” சேலம் எஸ்.பி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இது ஒரு பக்கம் இருக்க மீனவர் ராஜாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி, நேற்று பிரேத பரிசோதனையும் நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு எந்தவித தடையமும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக ராஜாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கர்நாடகா வனத்துறையால் சுடப்பட்டு உயிரிழந்த என அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது சுடப்பட்டதற்கான தடையும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுப்பினர். முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறி வருவதாதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.