திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி புகைப்படத்துடன் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் Appa, you are always with me. I am never alone. (அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை). என்று பதிவிட்டுள்ளார். 


திமுகவில் மகளிரணி செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கனிமொழி, தற்போது  துணைப் பொதுச்செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். மேலும் நாடாளுமன்ற குழு தலைவராகத் தனது அயராத உழைப்பால் உயரந்துஉள்ளார். முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, பெண் விடுதலை என்ற திராவிட இயக்க கொள்கைகளுக்கு எப்போதும் உரக்க குரல் கொடுப்பவர். 






2000ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவருடன் சிறை வளாகத்தில் கனிமொழி நின்ற புகைப்படங்களை இப்போது வரை யாரும் மறக்க முடியாது. தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இரவு பகல் பார்க்காமல் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.


இந்தி திணிப்பு எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்திக் காட்டியவர், ஹிந்தியில் பேசிய ஒன்றிய அமைச்சர்களிடம், எனக்கு ஹிந்தி தெரியாது என்று கனிமொழி பேசியபோது ’இந்தி தெரியாது போடா’ என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இந்த வார்த்தைகளுடன் டீசர்ட் அச்சடித்து அணிந்துகொண்டனர். டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.


சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப் பட்டத்திற்கும், இந்த பதிவிற்கும் தொடர்பு உள்ளதாகக் கனிமொழியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் எண்ணமாக இருக்கிறது.