தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அவர் அதிரடியாக எடுத்துவரும் முடிவுகள் பேசுபொருளாகின்றன. பாராட்டும் விமர்சனமும் வந்தாலும், குறிப்பிட்ட சிலவற்றில் முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக தெரிகிறது. அவற்றில் மிக முக்கியமானது அதிகாரிகளின் தேர்வு. கடந்த ஆட்சிக்காலங்களில் ஓரங்கட்டப்பட்ட மிஸ்டர் கிளீன் அதிகாரிகளை தனது செயலாளர்களாக நியமிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்ற, பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம்கொண்ட இறையன்பு ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் காவல்துறையிலும் அதிரடியான மாற்றங்கள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மாற்றம் என்ன தெரியுமா? லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐபிஎஸ்ஸின் நியமனம்தான். பலருக்கும் இதிலென்ன இருக்கிறது என தோன்றலாம். அதற்கான காரணத்தை உங்களுக்கு கடைசியில் சொல்கிறேன்.
கந்தசாமி – இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். ஏனெனில் அவரின் செய்கை அப்படி. தமிழக பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ஐபிஎஸ், ஆரம்பத்தில் சிபிஐயில் பணியாற்றி வந்தவர். இப்போதும் சிபிஐ அதிகாரிகளிடம் கந்தசாமி என பெயர் சொன்னால், மாணிக் பாட்ஷா பெயரைக் கேட்டதும் ஒரு நடுக்கத்தைக் காட்டுவார்களே, அப்படி நடுங்குவார்கள். கந்தசாமியா? அவரா? என புருவங்கள் உயரும். காரணம் அவரது நுண்ணறிவும், வழக்குகளை கையாளும் திறனும்தான். முடிக்க முடியாத, விஐபிக்கள் தொடர்பு வழக்குகளை விசாரிக்க எந்த அதிகாரியை போடலாம் என சிபிஐ இயக்குநர்கள் யோசிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் முதல் சாய்ஸ் கந்தசாமியாகத்தான் இருந்தார்.
கந்தசாமி ஐபிஎஸ் ஹிஸ்டரியில் முக்கிய கேஸ் என்றால் அது கேரளாவில் நடந்த ஊழல் வழக்கு. கேரள முதல்வர் பினராயி விஜயனை அக்யூஸ்டாக சேர்த்து அதிரடி காட்டியவர். 2007-இல் சிபிஐயில் சேர்ந்த கந்தசாமிக்கு வந்து சேர்ந்தது கேரளா லாவ்லின் ஊழல். மின் கட்டுமான திட்டம் தொடர்பாக கனடா நிறுவனத்தோடு உரிய முறையில் ஒப்பந்தம் போடாமல் 375 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது சிஏஜி. மின்துறை அமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழ சிபிஐக்கு சென்றது அந்த வழக்கு. ஆவணங்களைத் திரட்டி பினராயி விஜயனை விசாரிக்க அனுமதி கேட்டார் கந்தசாமி, கேபினட் மறுத்தது. அதற்குப் பின் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் பல்வேறு தடைகள்.. தாமதங்கள்.. கடைசியில் பினராயி விடுவிக்கப்பட்டார். ஆனால் கந்தசாமி என்ற பெயர் கேரளாவில் நிலைத்தது. இதற்கிடையில் வழக்கு நடக்கும் போதே கோட்டயத்தில் மற்றொரு வழக்கு. 1992-இல் பிணமாக கிடந்த 19 வயது கன்னியாஸ்திரி வழக்கை கையில் எடுத்தார் கந்தசாமி. எப்போது தெரியுமா ? குற்றம் நடந்து 16 ஆண்டுகள் கழித்து.. இரவு பகல் பாராது உழைத்து பாதிரியார், கன்னியாஸ்திரி என இருவரை கைது செய்து குற்றத்தை நிரூபித்தார். ”பத்து பேர அடிச்சு டான் ஆகல.. நான் அடிச்ச பத்து பேருமே டான்” என்னும் வசனத்தைப்போல, கைவைத்த இடமெல்லாம் டாப் ஆட்கள்தான். அதற்கான வெறுப்பையும் கூடவே சம்பாதித்து வைத்திருந்தார்.
2010-ஆம் ஆண்டு பதவி உயர்வு கிடைத்து. சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் கந்தசாமி. திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பைக்கு மாற்றுகிறோம், சிபிஐயிடம் ஒப்படைக்கிறோம், வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பறந்தது.
அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அதிகாரிகள் பலரும் இந்த வழக்கு நம்மிடம் வரக்கூடாது என எண்ணிக்கொண்டிருக்க, விசாரணையை கந்தசாமி நடத்துவார் என உத்தரவு வந்தது. அடுத்தடுத்து நடந்தது எல்லாம் அதிரடி ரகம்தான். அமித்ஷாவை விசாரணைக்கு வரச்சொன்னார் கந்தசாமி, பாஜகவினர் கொதித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. மீண்டும் சம்மன். விசாரணை சூடுபிடித்தது. மீடியாக்கள் கந்தசாமி ஐபிஎஸ் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. அப்போது அடுத்தடுத்து நடந்தது யாரும் எதிர்பார்க்காதது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கந்தசாமிக்கு கிடைத்தது. இன்னும் காத்திருக்க முடியாது, நீதிமன்றம் சென்றார் , வாரண்ட் பெற்றார். அமித்ஷாவை கைது செய்தார். சிபிஐ அலுவலகம் கல்வீசப்பட்டது. ஆனால் விடிய விடிய விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார் கந்தசாமி. இந்த சம்பவம் பற்றி பேசிய கந்தசாமியின் ஜூனியர் அமிதாப் தாகூர், சொராபுதீன் என்கவுண்டர் நடந்து எங்களிடம் வழக்கு வந்தபோது 6 ஆண்டுகள் ஆகியிருந்தது. என்ன செய்யப் போகிறார் என நாங்கள் தவித்துக்கொண்டிருந்தபோது 5 ஆண்டுகளுக்கு முந்தைய சில ஆதாரங்களை கண்டுபிடித்துக்கொண்டு வந்து அமித்ஷாவை அரெஸ்ட் பண்ணாரு” என சொன்னார்.
ஆனால் திடீரென கந்தசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஓய்வுக்கு அனுப்பப்பட்டார். நலமானதும் மீண்டும் விசாரணையை தொடங்குவார் என சொன்னது சிபிஐ. அதன்பின்னர் அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது சிபிஐ. ஏன் என கேட்டால் அதுதான் உத்தரவு என்றார்கள். இப்போதுவரையிலும் அது மர்மம்தான்.
இந்நிலையில்தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமியை நியமித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கந்தசாமியின் ஏரியா ஃபைனான்ஷியல் கிரைம். அதாவது பணம் சார்ந்த குற்றங்களை டீல் செய்வதுதான். தேர்தலுக்கு முன்பு ஆளுநரை சந்தித்த திமுக ஒரு ஊழல் பட்டியலை கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தூசு தட்டப்படும் அந்த பட்டியலில் ஆரம்ப விசாரணைக்கு நீதிமன்றம் ஓகே சொல்லியிருக்கிறது. அவை அனைத்துமே கந்தசாமியின் ஃபேவரைட்டான ஃபினான்சியல் கிரைம் வகைகள்தான். முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கம்போல தனது நுண்ணறிவை தூண்டி விட்டிருக்கிறார் கந்தசாமி. மாட்டப் போகும் நபர்கள் யார் என்பது விரைவில் தெரியும்.