நெய்யாடுபாக்கம் - இளையனார் வேலூர் பாலம்: 20 கிராம மக்களின் கனவு நனவாகிறது! 37 கிமீ பயணம் இனி இல்லை!
Kanchipuram Neyyadupakkam - Elayanarvelur Bridge: "காஞ்சிபுரம் நெய்யாடுபாக்கம் - இளையனார்வேலுார் செய்யாற்றின் குறுக்கே, பாலம் கட்டுமான பணிகள் 80% நிறைவடைந்துள்ளது"

Neyyadupakkam Bridge: "காஞ்சிபுரம் அருகே 20 கிராமங்கள் பயன் பெறும் வகையில் செய்யாற்றின் குறுக்கே 19 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் கட்டணம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன."
கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட நெய்யாடுபாக்கம் கிராமத்து சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதிகளுக்குச் செல்ல செய்யாற்றின் குறுக்கே கடந்து இளையனார் வேலூர் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியைச் சென்றடைய 37 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு நெய்யாடுபாக்கம் சுற்று வட்டார கிராம மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக நெய்யாடுப்பாக்கம் - இளையனார் வேலூர் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
நெய்யாடுபாக்கம் பாலம்
இது குறித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையின் அடிப்படையில், கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்கும் பொருட்டு, சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெய்யாடும்பாக்கம் கிராமத்திற்கும், இளையனார் வேலூர் கிராமத்திற்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி நெய்யாடுபாக்கம் - இளையனார் வேலூர் இடையே செய்யாற்றின் குறுக்கே, 12 தூண்களுடன் 300 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலத்துடன் மேம்பாலம் அமைக்கும் பணிக்கான கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை காரணமாக பாலம் கட்டும் பணிகளில் தோய்வு ஏற்பட்டது.
பயனடையும் கிராமங்கள் என்னென்ன ?
இந்த பாலம் அமைப்பது மூலம் நெய்யாடுப்பாக்கம், இளையனார் வேலூர், காவாம்பயிர், இருமரம், மலையாங்குளம், புல்லம்பாக்கம், காட்டாங்குளம், புலிவாய், புத்தளி, பாண்டவாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள், சுமார் 37கி.மீ. தூரம் சுற்றி செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், ஒரகடம், தாம்பரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக போக்குவரத்து நெரிசலின்றி சென்றடைய முடியும்.

இதுக்குறித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கூறுகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் செய்யாற்றின் குறுக்கே 19 கோடி ரூபாய் மதிப்பில் 300 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெய்யாடுப்பாகம் - இளையனார் வேலூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டவுள்ள பாலம் மூலம் காவாம்பயிர், மலையாங்குளம், காவாந்தண்டலம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன் பெறுகின்றனர். மேலும், பணி நிமித்தமாக ஒரகடம் சிப்காட்க்கு செல்லும் மக்களுக்கு சுருக்கமான வழி, போக்குவரத்து நெரிசல் இல்லாத வழி மூலம் சராசரியாக பணிக்கு செல்பவர்கள் மட்டும் 5000இல் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், 5ஆம் வகுப்பு வரை ஊரில் உள்ள பள்ளியில் படிக்க முடிந்தது, தற்போது உயர் வகுப்புக்கு ஆற்றை கடந்து நெய்யாடுப்பாகம் தான் செல்ல வேண்டும்,மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் அப்பகுதியிலியே உள்ள சத்திரங்களில் தான் படிக்க வேண்டும், கற்றுத்தர இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே வருவார்கள், அதனால் கற்பது சிரமமாக இருந்தன. தற்போது, பாலம் அமைப்பதால் பள்ளிக்கு செல்வது மிக எளிதாக அமையும் இது அமைக்க முயற்சித்த சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
பாலத்தின் தற்போதைய நிலை என்ன ?
இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பாலம் கட்டும் பணிகள் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன. வருகின்ற மே அல்லது ஜூன் மாதத்தில் பணிகள் நிறைவடையும் என தெரிவித்தனர்.























