வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 26 ஆண்டுகளுக்குப் பிறகு அருள் மழை!
வடக்குப்பட்டு சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள பொய்கையில் இலட்சுமிதேவி அவதரித்து திருமாலை நினைத்து பூஜித்து வருகையில் அவர் சுந்தர வரதராஜனாய் காட்சியளித்து அருள்புரிந்தமையால் உத்தரலட்சுமிபுரம் என்று இத்தலம் சிறப்பித்து வழங்கப்படுகிறது.
பழங்காலத்தில் தென்னாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவர் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டு பூஜித்து வந்தார். ஒருசமயம் அவர் வடநாடு சென்று திரும்பிவருஞ்சமயம் வடக்குப்பட்டு தலத்தினைக் கடக்கும்போது இரவுவேளை வந்தமையால் அன்றிரவு அங்கு தங்கினார்.
அவரது கனவில் ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அருள்புரிந்தார். பெருமாளின் கருணையை எண்ணி மகிழ்ந்த அந்த அடியவர் ஆதிகேசவப் பெருமாளுக்கு அங்கு ஒரு திருக்கோயிலைக் கட்டினார். பெருமாள் இத்தலத்தின் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் பூமி நீளாதேவி சமேதராய் காட்சியருளுகின்றார். இத்தலத்திற்கு 1999 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மூலவர், தாயார் விமானங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனைச் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து தருமாறு கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
வரதராஜப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்
இதனை ஏற்று இத்தலத்தினைச் சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி மூலவர், தாயார் விமானங்கள் பழுதுபார்த்து புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், சுற்றுச்சுவர் சீரமைத்தல், அலுவலகம் கட்டுதல், மின் மராமத்து பணி, புதிய மரக்கதவுகள் அமைத்தல், வாகன மண்டபம் கட்டுதல் ஆகிய திருப்பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று நிறைவடைந்தன.
இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. புதன்கிழமை காலையில் துவாரபூஜை, ரட்சாபந்தனம், மகா கும்பஸ்தாபனம், வாஸ்து ஓமம் நடைபெற்றன. மாலையில் விமானாதி சாயாதி வாசம், அனைத்து மூர்த்திகளுக்கும் விசேஷ திருமஞ்சனம், துவாரபூஜை ஓமம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் துவாரபூஜை ஓமமும், மதியவேளையில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், மாலையில் துவாரபூஜை ஓமமும், இரவு சயனாதி வாசமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலையில் விஸ்வரூபம், துவாரபூஜை, சாந்தி ஓமம், பிராயச்சித்த ஓமம், லக்னபிரீதி, கிருகபிரீதி ஆகிய பூஜைகள் நடைபெற்று காலை 8.30 மணிக்கு மங்கலவாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஒலிக்க யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன. அர்ச்சகர்கள் கலசங்களைத் தாங்கி திருக்கோயிலை வலம்வந்து விமானங்களை அடைந்தனர். காலை 10 மணிக்கு வேதங்களும் தமிழ்மறைகளும் ஒலிக்க மூலவர், தாயார் விமானங்களின் மீது திருக்கோயில் அர்ச்சகர்கள் புனித நீரைத் தெளித்து கும்பாபிஷேகம் செய்தனர்.
கூடியிருந்த பக்தர்கள் சுந்தரவரதராஜா போற்றி, ஆதிகேசவா போற்றி என்று கோஷம் எழுப்பி வணங்கினர். அனைத்து பக்தர்கள் மீதும் டிரோன் மூலம் கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம், ஒன்றிய கவுன்சிலர் இராஜேந்திரன், ஊராட்சி தலைவர் நந்தினிமேத்தா வசந்தகுமார், திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், துறை ஆய்வர் ரம்யா, அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர்கள் விஎஸ்.ரங்கநாதன், வி.சுதர்சன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் விஎஸ்.கோதண்டராமன் மற்றும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலையில் வடக்குப்பட்டு கிராமத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.























