ஏன் தண்டமா வந்து நிக்கிறீங்க? கதை சொல்லாதீங்க.. விவசாயிகளுக்காக அதிகாரிகளை விளாசிய காஞ்சிபுரம் கலெக்டர்!
"விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் எந்தவித விவரமும் இல்லாமல் தண்டமாக வந்து, நிற்கிறீர்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கண்டிப்பு"

270 ரூபாய் கொண்டு யூரியா வாங்கினால், 1300 ரூபாய் கொடுத்து டிஎபி அல்லது காம்ப்ளக்ஸ் வாங்க வேண்டும் என தனியார் மருந்து விற்பனையாளர்கள் நிர்ப்பந்திப்பதாக விவசாயிகள் புகார்
காஞ்சிபுரம் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய பெருமக்கள்,அனைத்து துறை அரசு அலுவலர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
விவசாயிகள் சரமாரி புகார்
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் பகுதுயைச் சேர்ந்த விவசாயி அன்பரசன் பேசுகையில், விவசாய நிலங்கள் நிறைந்த தங்களது பகுதியில், விவசாயத்தையே மூலதன தொழில் ஆக பல தலைமுறைகளாக செய்து வருவதாகவும், மூன்றும் போகம் விவசாய சாகுபடி செய்து வருவதாகவும் தெரிவித்தார். விவசாயம் ஒன்று தான் எங்களது வாழ்வாதாரமாக உள்ள சூழ்நிலையில், தற்போது எங்களது பகுதியில் புதிதாக தொழிற்பூங்கா அமையவுள்ளதாகவும், அவ்வாறு தொழிற் பூங்கா அமைக்கப்பட்டால் விவசாய நிலங்களை பறிகொடுத்து விட்டு விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகும் என தெரிவித்தார்.
தொழிற் பூங்காவை மாற்று இடத்திற்கு அமைக்கும் படி மனவேதனையுடன் தெரிவித்தார்.அதுகுறித்தான மனு ஒன்றினையும் அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயி அன்பரசன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
உரம் தட்டுப்பாடு
விவசாயி பெருமாள் கேள்வி எழுப்புகையில், விவசாய நிலத்திற்கு உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் 270 ரூபாய் கொண்டு யூரியா வாங்கினால் 1300 ரூபாய் கொடுத்து, டிஎபி அல்லது காம்ப்ளக்ஸ் வாங்க வேண்டும் என தனியார் மருந்து விற்பனையாளர்கள் நிர்ப்பந்தம் விதிப்பதாக கூட்டத்தில் தெரிவித்தார். உடனே கோபம் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதிகாரிகள் எந்தவித விவரமும் இல்லாமல் தண்டமாக வந்து, நிற்கிறீர்கள் என கடிந்துக்கொண்ட அவர், விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார்.
காட்டுப்பன்றிகள் தொல்லை
மேலும் விவசாயிகள் உத்தரமேரூர் பகுதியில் கரும்பு விளைச்சல் சாகுபடி செய்யும் வேளையில் காட்டு பன்றிகளால் தொடர்ந்து, அச்சுறுத்தலும் விளைநிலைகளை நாசப்படுத்தியும் வருவதை வனத்துறையினர் பல்வேறு கூட்டங்கள் நடத்தி அதற்குண்டான குழு அமைத்து உடனடியாக காட்டுப் பன்றிகளை சுட உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியதை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துரையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். வனத்துறையினரோ மழுப்பலான பதில்களை தெரிவித்ததால், மாவட்ட ஆட்சியர் கோபம் கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை சரிவர வழிகாட்டுதல் செய்யாத வனத்துறையினரை கடிந்து கொண்டும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வன அலுவலர்களை எச்சரித்தார். இச்சம்பவம் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.





















