காஞ்சிபுரம்: ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சாதனை! இந்தியாவின் 'நம்பர் 1' மாவட்டம் - ஆச்சரியமூட்டும் தகவல்!
"காஞ்சிபுரம் இந்திய அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் 47% பங்களிப்புடன் ,95,948.41 கோடி மதிப்பிட்டுள்ள ஸ்மார்ட் ஃபோன்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது"

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது.
தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம்
சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலக அளவில் முன்னணி தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் உருவாகும் பல்வேறு பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
முதலிடத்தில் காஞ்சிபுரம்
தமிழக அளவில் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, Q1 FY 2025–26 காலாண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 59,944.98 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வகித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்போன் உற்பத்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஐபோன் உற்பத்தி செய்து வருகிறது. ஐபோன் உற்பத்தியில் சீனாவிற்கு போட்டியாக இந்த நிறுவனம், செல்போன்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதேபோன்று பாரத் FIH லிமிடெட் நிறுவனம் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து சாம்சங், ரெட்மி, ஒப்போ, வியோ போன்ற பல்வேறு முன்னணி செல்போன்களின் உதிரிபாகம் தயாரிக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சாதித்த காஞ்சிபுரம்
இந்தியா அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில், 47.24% பங்களிப்புடன் காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதியாகும் செல்போன்களை 47 சதவீதம் காஞ்சிபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மொத்த ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி மதிப்பு 2,03,108.61 கோடியாக இருக்கிறது. அதில் 95,948.41 கோடி மதிப்பிட்டுள்ள ஸ்மார்ட் ஃபோன்கள் காஞ்சிபுரத்தில் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது





















