காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா, சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட, திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலப்பு என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சாலவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலம் கலப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா, அசிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட, திருவந்தார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வந்துள்ளது. இங்கு அந்த பள்ளியை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 90க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வந்துள்ளனர்.
இந்தசூழலில், வழக்கம்போல் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள பொது சுகாதார குடிநீர் தொட்டியில் தண்ணீர் அருந்தியுள்ளனர். அதன்பிறகு, மதிய உணவு தயார் செய்ய குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்து சந்தேகமடைந்த சமையலர் அந்த தொட்டியின் மீது ஏறி பார்த்துள்ளார். அப்போது, அந்த குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் மனித மலம் மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தாங்கள் சமைத்த மதிய உணவினை குழிதோண்டி புதைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து மாற்று நீர் கொண்டுவரப்பட்டு மதிய உணவை சற்று தாமதமானாலும் தயாரித்து மாணவ-மாணவியருக்கு வழங்கியுள்ளனர். மேலும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக சாலவாக்கம் காவல்துறையினருக்கு புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஏபிபி நாடு சார்பில் கல்வி அலுவலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தகவல் இப்பொழுது தான் தெரியும் எனவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார் பயன்படுத்தப்படாமல் இருந்த தொட்டியில் பாத்திரம் மற்றும் அரிசி மட்டுமே கழுவி வந்ததாகவும் துர்நாற்றம் அடித்ததன் காரணமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதில் அழகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
நினைவிருக்கிறதா வேங்கைவயல் சம்பவம்..?
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவாயல் என்ற பகுதியில் குக்கிராமத்தில் உள்ள பட்டியலின சமூகத்தின் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கொட்டப்பட்ட கொடூரமான சம்பவம் நடைபெற்றது. கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் இன்னும் யார் குற்றவாளி என கண்டறியப்படவில்லை.
கடந்த டிசம்பர் 2022ல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பல முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடிநீர் வழங்கும் முறையை பரிசோதிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். 6க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடும்பங்களில் வசிப்பவர்கள் அவர்களின் மேல்நிலை நீர்த்தேக்கத்தை சரிபார்க்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்ய திறந்து பார்த்தபோது, தண்ணீரில் ஏராளமான மனித மலம் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை விசாரித்து, பின்னர் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சிபி சிஐடிக்கு காவல்துறை இயக்குநர் (அப்போதைய தமிழ்நாடு டிஜிபி) சைலேந்திர பாபு மாற்றினார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.