மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: ஆந்திரா போல் உதவித்தொகை வேண்டி, தமிழக அரசை கண்டித்து நூதன போராட்டம்!
Kanchipuram: "காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உதவித்தொகை, வழங்குவதைப்போல் தமிழ்நாட்டிலும் உதவித்தொகை உயர்த்தி வழங்கிட கோரி, மாற்று திறனாளிகள் தமிழக அரசை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி நெத்தியில், நாமம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை
தமிழ்நாடு அரசு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 'வருவாய் துறை' மூலம் ரூ.1,500/- மற்றும் தீவிர மாற்றுத்திறனாளிகளுக்கு 'மாற்றுத்திறனாளிகள் துறை' மூலம் ரூ.2,000/-மும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இது தற்போதைய விலைவாசி அடிப்படையில் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அண்டை மாநிலமான ஆந்திரா, மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் தன்மையைப் பொறுத்து ரூ.6,000/-, ரூ.10,000/-, ரூ.15,000/-, என மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உலகை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியில் நாமம் போட்டும் நூதன முறையில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள், திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை கைது செய்து, தடுப்பு காவலில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று, தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றத்திறனாளிகள் கோரிக்கையை முன் வைத்தனர்.























