சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது, இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி , வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது, விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.


இந்நிலையில் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். அப்போது கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிக்கி கொண்டுள்ளனர்,அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். அப்போது தாய் மற்றும குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள் இரண்டு பேர், ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பினனர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர், இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 



இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது, இதனையடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அப்துல் ரஹ்மான் எனும் வாலிபர் தான் அந்த குழந்தையையும் தாயையும் காப்பாற்றியிருக்கிறார். அவரை கமல்ஹாசன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்த விடியோ வெளியாகி உள்ளது.


கமல்ஹாசன் அந்த போன் அழைப்பில், "துணிந்து செய்வது தான் முக்கியம், அந்த தாயும் சேயும் அப்படியே ஆற்றில் போயிருக்கலாம், நீங்களும் அந்த வழியே போயிருக்கலாம், ஆனால் துணிந்து செய்யும் உங்களை போன்றோர் தான் நம் அரசியலுக்கும் வேண்டும் இந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் வேண்டும். உங்களை பாராட்டுகிறேன் என்பதற்காக என் கட்சியில் சேர்க்கவில்லை, துணிச்சலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். உங்களை என் கட்சிக்கு அழைக்கவில்லை அரசியலுக்கு அழைக்கிறேன், உங்களை போன்றோரை இந்த சமூகத்திற்கு சேவை செய்ய அழைக்கிறேன், அந்த நதியை விட வேகமானது காலம், என்னை எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லும், அதற்குள் உங்களை போன்ற மனிதர்களை தூக்கி விட்டுவிட வேண்டும் என்னும் பசி தான் என்னுடையது. நீங்கள் எல்லாம் லீடர் மெட்டீரியல், தொண்டனாக தேங்கி விடாதீர்கள்." என்று அப்துல் ரஹ்மானிடம் பொது வாழ்விற்கான வித்து இருப்பதை அழுத்த பதியவைத்தார்.



மேலும், "அந்த கூட்டத்திலேயே உங்களை வேண்டாம் போகாதே என்றவர்கள் தான் அதிகம், அனைவரும் விடியோ எடுத்துக்கொண்டு நிற்கிறார்கள். பொறுக்கித்தனம் அது, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, நான் பலமுறை பிக்பாஸில் சொல்லியிருக்கிறேன், ஒரு ஆக்சிடெண்ட் நடந்தால் அங்கு சென்று செல்பி எடுத்துக்கொண்டிருப்பது போன்ற சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று.அவர்கள் அனைவரும் நீங்கள் தப்பிக்கவேண்டும் என்று சரனாகதியாகி உங்களை காப்பாற்றுகின்றனர், எது எளிதோ அதைதான் செய்ய துணிகிறார்கள். எனக்கு இதில் சந்தோஷம் என்னவென்றால் நீங்கள் அதிகாரி அல்ல, ஏதோ சம்பலத்திற்காக வேலை செய்யவில்லை, மெடலுக்காக வேலை செய்யவில்லை. பிரசவம் பார்க்கும் மருத்துவரை விட அதிக உரிமை உங்களுக்கு அந்த குழந்தை மீது உண்டு. ஃகாட் பாதர் என்று சொல்ல கூச்சம் இருந்தாலும், நீங்கள் அதனுடைய ஃபாதர் தான். காப்பாற்ற சென்ற உங்களுக்கு எதுவும் ஆகாமல் திரும்பி வந்ததற்காக இயற்கைக்கு நன்றி." என்று அப்துல் ரஹ்மானிடம் கூறினார். 


கமல் பேசும் வீடியோ இதோ....