உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில்:


அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர். 


கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.


"30 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன்”


இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதன்படி, "நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி பேசி உள்ளேன். அதே கருத்து தான் இப்பவும் சொல்லுவேன்.


அதில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார் கமல்ஹாசன்.  இதனை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் என்ன பேசியிருப்பார்? என்று கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி குறித்து கமல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் சொன்னது என்ன?


அதில், "பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகராக நான் இதையெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் பேசுவேன். 3.7 ஏக்கர் நிலத்தில் இருந்த மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.






டிசம்பர் 6ஆம் தேதியை வரலாற்றிலேயே அழிக்கனும். இவை எல்லாம் அரசியல். யாரும் மதத்தை வைத்து  அரசியல் செய்யக் கூடாது. இது தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது" என்றார் கமல். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, டெல்லியில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.