MNM Meeting: மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்:


மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று தமிழக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை?


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், மக்கள் நீதி மய்யத்தின் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? எதிர்காலம் என்ன? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


திமுக உடன் கைகோர்க்கும் கமல்?


கடந்த 2018ம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், இதுவரை 2 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி, 37 தொகுதிகளில் களம்கண்டு வெறும் 0.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அதேநேரத்தில், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவிகித வாக்குகளை பெற்றது. இந்நிலையில் தான் கடுமையாக விமர்சித்து வந்த திமுக உடன் கடந்த சில மாதங்களாக, கமல்ஹாசன் நட்பு பாராட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகள் பலவும், திமுகவை கடுமையாக விமர்சித்த போதும் கூட கமல் அரசுக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்தார். இதனால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திமுக உடன் கூட்டணி, அமைத்து தேர்தலில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது பணிகள முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவையில் கமல் போட்டி?


2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம், கமல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து, கோவை தொகுதியில் களமிறங்க கமல் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.  2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கோவையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில், அங்கு திமுக கூட்டணியுடன் களமிறங்கினால், நிச்சயம் வெற்றியை தனதாக்கலாம் என கமல் கணக்கிட்டு வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.