கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இளவட்டக் கல் தூக்கி எரியும் போது தவறி முகத்தாடையில் விழுந்து படுகாயம் ஏற்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு என்பவர் ஆசாரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் பிரபு கலந்து கொண்டு இளவட்ட கல்லை தூக்கி பின்புறமாக எரியும்போது எதிர்பாராத விதமாக முகத்தின் தாடை பகுதியில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயம் அடைந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இளவட்ட கல்லை தூக்கியபோது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இளவட்டக்கல் :- 

 

இளவட்டக்கல் ஒரு எடை-தூக்கும் விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி விளையாட்டு நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் ஒரு சாராரிடையே காணப்படும் குலவழக்கம். இளவட்டம் தூக்கும் கல் இளவட்டக் கல்.