Kallakurichi LIVE: 11 ம் வகுப்பு விலங்கியல் புத்தகத்துடன் அடக்கம் செய்யப்ட்ட மாணவியின் உடல்!
Kallakurichi Violence LIVE Updates: பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ம் வகுப்பு விலங்கியல் புத்தகத்துடன் மாணவியின் உடலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
மாணவி அடக்கம் செய்யப்படவுள்ள மயானத்துக்கு செல்லும் வழியெல்லாம் போலீஸ் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலுக்கு பெரியன்நெசலூரில் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.
உயிரிழந்த பள்ளி மாணவி கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிறிய விபத்தில் சிக்கியது.
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ள நிலையில் அங்கு அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் இருக்க 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர் சி.வி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், காவல்துறை ஐஜிக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது
மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மேலும் முறையீடு.
கள்ளக்குறிச்சி +2 மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைக்க முடியாது
கள்ளக்குறிச்சி + 2 மாணவி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 108 பேருக்கு ஆகஸ்ட் 1 வரை நீதிமன்றக் காவல்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அமைச்சர்கள் எ.வ. வேலு, அன்பில் மகேஷ், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிகின்றனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கண்ணனும் அமைச்சர்களுடன் சென்று காவலர்களுடன் சந்திப்பு.
நாளை முதல் தமிழகத்தில் வழக்கம் போல் பள்ளிகல் இயங்கும். பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி +2 மாணவி உயிரிழந்த தனியார் பள்ளியை திறக்க பெற்றோர் கோரிக்கை.
மழையையும் பொருட்படுத்தாமல் கைது செய்யப்பட்ட 108 பேர் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்.
கலவரம் நடந்த கனியாமூர் பள்ளியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், கணேசன் ஆய்வு
கள்ளக்குறிச்சி +2 மாணவி மரணம் மற்றும் நேற்றைய கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாணவி ம்ரணம் தொடர்பான வழக்கில் அவரது தந்தையின் முறையீடு ஐகோர்ட்டில் நிராகரிப்பு. மறு பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் முறையீடு நிராகரிப்பு . தனி நீதிபதி சதிஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மாணவியின் தந்தை ராமலிங்கம் முறையீடு.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் போலீஸ் குவிப்பு. கடலூர் மாவட்டம் தொண்டாங்குறிச்சி, வேப்பூர், கழுத்தூரிலும் சுமார் 300 போலீசார் குவிப்பு.
இளைஞர்கள் சமூதாயம் எதை நோக்கி செல்கிறது? உண்மை எது என தெரியாமல் எதற்கு போராட்டம் ? கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன ? என கரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அம்பிகா கேள்வி எழுப்பினார்.
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் எச்சரிக்கை
கரூரில் இருந்த உங்களுக்கு கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது என தெரியுமா? தவறான கருத்தை சமூக ஊடகத்தில் பகிர கூடாது. கரூரில் கைதான நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிபதி அம்பிகா உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஆய்வு.
ஓய்வுபெற்ற தடவியல் துறை நிபுணர் சாந்தகுமாரியும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு பரிசோதனையின் போது உடன் இருப்பார்- நீதிமன்றம்.
மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மூன்று மருத்துவர்களை நீதிமன்றம் அமைத்தது. மருத்துவர்கள் கீதாஞ்சலி, கோகுலநாதன், ஜூலியான ஜெயந்தி ஆகியோர் பரிசோதனை குழுவில் உள்ளனர்.
கைதானவர்கள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கச்சராபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் என்பவர் கலவரம் தொடர்பாக கைது.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு கலவரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை முடிந்தது
ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் கொடுக்காமல் இருக்க, மனுதாரருக்கு வழக்கறிஞர் சரியான முறையில் ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருக்கும் சமூகத்தின் மீதான கடமை இருக்கிறது.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 320 பேர் கைதான நிலையில் 20 சிறார்கள் உட்பட 128 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.
இனி வருங்காலத்தில் பள்ளிகளில் வன்முறை நடந்தால் சிபிசிஐடி தான் விசாரணை நடத்த வேண்டும் - நீதிபதி
மாணவியின் உடலை மறு கூராய்விக்கு பின், எதிர்ப்பில்லாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். உயிரிழந்த மாணவியின் இறுதி சடங்கு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் - நீதிபதி
மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யும் போது, வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.
மாணவியின் உடலை கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூராய்வின் போது வழக்கறிஞருடன் மாணவியின் தந்தை உடனிருக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பீடுகளை அவர்களிடம் இருந்து வசூலியுங்கள் - நீதிபதி
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் - நீதிபதி
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பற்றிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்தது யார்? , வழக்கு தொடர்ந்த பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சதீஷ்குமார் மாணவியின் தந்தைக்கு சரமாரி கேள்வி எழுப்பினார்
கள்ளக்குறிச்சி தனியார் வன்முறை சம்பவம் தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் முதல்வர் , தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் - டிஜிபி சைலேந்திர பாபு
கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து சரியான முடிவுக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடக்க வேண்டாம் எனவும் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக முன் அனுமதி பெறவில்லை என்றும், விதிகளை மீறி விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ஆறுதல் சொல்லவில்லை. பள்ளி நிர்வாகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த வன்முறை சம்பவம் நடந்திருக்காது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. திமுக ஆட்சியில் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பள்ளி செயலாளர் சாந்தி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு மாணவி ஸ்ரீமதியின் தாய் தான் முழு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து சேலம் செல்பவர்கள் வேப்பூரில் இருந்து தலைவாசல் வி.கூட்ரோடு வழியாக சென்று சேலம் செல்லலாம். சேலத்தில் இருந்து சென்னை செல்வோர் வி.கூட்ரோடு பகுதியில் இருந்து நைனார்பாளையம், வேப்பூர் வழியாக சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கம்...சேலத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் வேப்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
சின்ன சேலம் அருகே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறை நடந்த பகுதிக்கு பொதுமக்கள் வராமல் தடுத்து அவர்கள் உடமைக்கு பாதுகாப்பு அளித்தோம் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யக்கோரிய போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு..கலவரம் நடந்த பகுதிக்கு உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு விரைந்துள்ளனர்.
திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: கலவரத்தால் பொங்கிய அண்ணாமலை!
”ஒரு கணமும் தாமதிக்காதீர்”... பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக டிடிவி தினகரன் ட்வீட்!
சின்னசேலம் பள்ளி அருகே கலவரத்தை கட்டுப்படுத்த வந்த அதிவிரைவுப்படையினர் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மாணவி மரணம் - போர்க்களமாக மாறிய போராட்டம்
பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் - மாணவர் அமைப்பினர் போராட்டம்
சின்னசேலத்தில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் - போலீசார் வாகனத்தை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள்!
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் - போலீசார் வாகனத்தை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள்!
கள்ளக்குறிச்சியில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு!
சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகாருக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Background
Kallakurichi School Incident LIVE Updates:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜீலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி கல்லூரி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கையை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு காரணமான கல்வி நிறுவனத்தை மூட வேண்டும் கல்வி நிறுவனத்தின் தாளாளரை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை வேண்டும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பேரணியாக வந்த ஸ்ரீமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பு கட்டைகளை தாண்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள் கல்வி நிறுவன தாளாளரை கைது செய்ய வேண்டும், கல்வி நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறி மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த, போராட்டக்காரர்களை கட்டுபடுத்த காவல்துரையினர் தடியடி நடத்த தொடங்கினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -