கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல் மற்றும் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி பணிகள், தினசரி நாளங்காடி அமைத்தல் என மொத்தம் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல் மற்றும் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி பணிகள், தினசரி நாளங்காடி அமைத்தல் என மொத்தம் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி அமைத்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் முன்னிலையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணிகள், அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில அமைக்கப்படவுள்ள கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தி பணிகள் மற்றும் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் திட்டத்தின்கீழ் ரூ.9.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தினசரி நாளங்காடி அமைத்தல் பணியையும் என மொத்தம் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி பொதுமக்களின் மிக நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளதுடன் பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் 70க்கும் மேற்பட்ட கடைகள், நேரக்காப்பாளர் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின் விளக்கு வசதிகள், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சியில் புதிய குடிநீர் அபிவிருத்தி பணிகள் மூலம் 2 ஏரிகளில் திறந்தவெளிக் கிணறு அமைத்தல், 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் மற்றும் குடிநீர் விநியோக குழாய்கள் அமைத்தல் பணிகள் மூலம் நகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் விநியோகம் பற்றாக்குறையின் கீழ் வழங்க முடியும். இதேபோன்று புதிதாக அமைக்கப்படவுள்ள தினசரி நாளங்காடியில் 152 எண்ணிக்கை கடைகள் அமைக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் புதிய தினசரி நாளங்காடி அமைக்கப்பட உள்ளது.
ஒரு நகரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பேருந்து நிலையம், சாலை மேம்பாடு, கல்வித் துறையில் கட்டமைப்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டமைப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டமைப்பு உருவாக்குவதால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதனடிப்படையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம், புதிய மாவட்ட ஆட்சியரசுக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நகருக்கு அருகாமையில் உள்ள சாலைகளுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் புறவழிச்சாலை அமைக்க 14 கி.மீ சாலை இடங்களை இணைக்க ரூ.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள இடங்களை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.