சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிப் லைனில் சிக்கிய 2 பெண்கள் 20 நிமிடங்களாக தவித்து வந்ததாகவும் அவர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்ட "கலைஞர் நூற்றாண்டு பூங்கா"வை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி திறந்து வைத்தார். 

 

அந்தரத்தில் தொங்கியபடி தவித்த பெண்கள்:

 

தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில், 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா.

 

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10.000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை. மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

 

நடந்தது என்ன?

 

இன்று பொது விடுமுறை (விஜயதசமி) என்பதால் சினிமா தியேட்டர்கள், கோயில்கள், கேளிக்கை பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில், கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவிலும் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது.

 

இப்படிப்பட்ட சூழலில், பூங்காவில் உள்ள ஜிப் லைனில் பழுது ஏற்பட்டு செயல்படாமல் போனது. இதன் காரணமாக, ஜிப் லைனில் சிக்கிய 2 பெண்கள் 20 நிமிடங்களாக தவித்து வந்தனர். இறுதியில், கயிறு மூலம் இரு பெண்களும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.