அதிமுகவின் 2016லிருந்து 2021ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததாக தருமபுரியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.
மேலும், அவர் மீதும், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வருமானத்தைவிட கூடுதலாக ரூ 11.32 கோடி சொத்து குவித்ததாக 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மட்டுமின்றி சேலம், சென்னை, தெலங்கானாவின் கரீம் நகரில் சோதனை தீவிரமாக நடந்துவருகிறது.
அதிமுகவின் ஆறாவது அமைச்சர்:
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, ஆகிய ஐந்து பேரின் வீடுகளிலும், அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
எம்.ஆர். விஜயபாஸ்கர்:
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி பொறுப்பேற்ற பிறகு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது முதல் ரெய்டு அஸ்திரம் வீசப்பட்டது.
அவரது வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் கடந்த வருடம் (2021) ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.பி. வேலுமணி:
கோவை குனியமுத்தூரில் இருக்கும் எஸ்.பி. வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 52 இடங்களில் சோதனை நடந்தது.
சோதனையின்போது வீட்டுக்கு வெளியே குவிந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த ஆதரவாளர்களுக்கு உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளும் விநியோகம் செய்யப்பட்டன.
கே.சி. வீரமணி:
ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள் வீடு, உறவினர்கள் வீடுகளிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களிலும் கடந்த செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் வெளிநாட்டு பணம், சொகுசு கார்கள், தங்கம் உள்ளிட்டவை எடுத்து செல்லப்பட்டன.
சி. விஜயபாஸ்கர்:
அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்சப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அவருக்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கமணி:
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
தற்போது அதிமுகவில் ஆறாவது அமைச்சராக கே.பி. அன்பழகன் சோதனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்துவருவதால் அதிமுகவின் மற்ற முன்னாள் அமைச்சர்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்