K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
பல முறை எனக்கு மாற்றுக்கட்சிகளில் இருந்து நல்ல பொறுப்புகள் தேடி வந்த போதும் நான் மற்றவர்களை போல வேறு கட்சிக்கு செல்லவில்லை என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “கட்சியில் இருந்து நான் மார்ச் 18, 2018ல் நீக்கப்பட்டேன். இதுவரை 9 ஆண்டுகள் ஆகிறது. உங்கள் பார்வையில் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன், வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் செய்த தவறுகளை நான் செய்யவில்லை.
பல முறை எனக்கு மாற்றுக்கட்சிகளில் இருந்து நல்ல பொறுப்புகள் தேடி வந்த போதும் நான் மற்றவர்களை போல வேறு கட்சிக்கு செல்லவில்லை. என்னை பொறுத்தவரை அதிமுக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் திராவிட சித்தாந்தத்தில் வழிநடத்தப்பட்ட வேண்டும் என்கிற ஒற்றை புள்ளியை தவிர வேறு சுயநலம் எதுவும் இல்லை. நீங்கள் செய்கிற நல்ல விசயங்களை உங்களோடு எனக்கு மனக்கசப்பு இருந்தாலும் அதை நான் ஆதரித்திருக்கிறேன். தவறான விசயங்களை இது தவறு என்று சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறேன்.
ஒருவேளை உங்களுக்கு நான் உங்கள் விசுவாசியாக இல்லாமல் புரட்சித்தலைவர் விசுவாசியாக இருக்கிறேன், இன்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக இருக்கிறேன், லஞ்சம் மற்றும் ஊழல் போன்ற எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறேன், பதவிக்காக கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது என்றிருக்கிறேன் என்பதற்காகவா?.. ஏன் என்னுடைய நீக்கத்தை மட்டும் ரத்து செய்ய மறுக்கிறீர்கள்.
இந்த 9 ஆண்டு காலத்தில் குறைந்தபட்சம் 18 முறை கே.பி.முனுசாமி, சேலம் இளங்கோவன், நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், வேலுமணி மற்றும் உங்கள் உறவினர்கள் என ஒரு பட்டியலே இருக்கிறது. இவர்களெல்லாம் பலமுறை நான் இந்த இயக்கத்திற்கு தேவை என்று எடுத்துச்சொல்லியும், வற்புறுத்தியும் ஏன் பிடிவாதமாக மறுக்கிறீர்கள்.நான் உங்களுக்கு ஒரு போட்டியாளன் என்று பயப்படுகிறீர்களா?
கடந்த தேர்தலில் கூட குறைந்தபட்சம் என் மகனுக்காவது வாய்ப்பு கொடுங்கள் உங்களுக்கு நான் போட்டியாளராக இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் நான் அரசியலை விட்டு கூட விலகிவிடுகிறேன் என்று கூட பேசப்பட்டது, அதையும் நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள். அதற்கான காரணம் என்ன? தற்பொழுதும் கூட வேலுமணி, சி.வி.சண்முகம் அவர்கள் தனி அணியாக பிரிந்த பொழுதும் கூட சிலர் எனக்காக உங்களிடம் பேசினார்கள் ஆனால் நீங்கள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறீர்கள்.
இது உங்களது சுயநலப்போக்கா? இல்லையென்றால் நான் செய்த தவறு என்ன என்பதை பொதுவெளியில் சுட்டிக்காட்டுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுகவை நான் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற போது என்னை தெருவில் போகிறவன் என்று விமர்சித்தீர்கள். ஆனால் இன்று நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள்.
அடிப்படை தொண்டனால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான் வழக்கு தொடுத்ததற்கு, நான் போலி உறுப்பினர் அட்டை வழங்கி பணம் வசூல் செய்தேன் என்று சொல்லி சூலூர் கந்தவேல் என்ற நபர் மூலம் நீங்கள் கிரிமினல் வழக்கு தொடர்ந்து 21 நாட்கள் என்னை சிறையில் வைத்தீர்கள். ஆனால் அந்த சூலூர் கந்தவேல் தற்போது ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தவெகவில் இணைந்திருக்கிறார். நான் சிறையில் இருந்து வெளிவந்த போது கோபத்தில் மாற்று கட்சிக்கு சென்றுவிடுவேன் என்று எதிர்பார்த்தீர்கள்.
நான் உங்களுக்காக இந்த கட்சியில் இணைந்திருந்தால் அப்படி நினைத்திருப்பேன் ஆனால், இது எம்.ஜி.ஆர் கட்சி அவருக்காக நான் அதிமுகவில் பயணிக்கிறவன். இந்த இயக்கத்தின் ஒன்றரைகோடி தொண்டர்களுக்கும், இந்த இயக்கத்தின் எதிர்கால நலனும் எனக்கு முக்கியம் அதனால் என்னுடைய நீக்கத்தை உடனடியாக நீங்கள் ரத்து செய்ய வேண்டும்” என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















