Continues below advertisement


நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்துள்ளார். தனது பராமரிப்புக்காக அவர் கேட்டிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா.? மாதம்பட்டி ரங்கராஜே அலறியிருப்பார். அப்படி எவ்வளவு கேட்டார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.


மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா விவகாரம் என்ன.?


பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை கோவிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், அந்த திருமணத்தை அவர் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.


இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கருவுற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ரங்கராஜ் விலகியுள்ளார். இதையடுத்து, ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் ஜாய் கிரிசில்டா. மேலும், ரங்கராஜால் பலமுறை கருவுற்று, அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்து வந்தார்.


விசாரணையில் உள்ள வழக்கு



இந்நிலையில், கடந்த மாதம், ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சென்றுவிட்டார் என குற்றம்சாட்டியிருந்தார். பின்னர், அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகள் மூலம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


அதோடு, இந்த பிரச்சனை குறித்து முதல்வர் தனிப்பிரிவு ஆன்லைன் போர்டல் வழியாகவும் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜராகி, தன் தரப்பில் ஆதாரங்கள் அளித்தார். அதே நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


ஆனால், அந்த விசாரணையின் பின்பும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவர் மாநில மகளிர் ஆணையத்தில் புதிய புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாநில மகளிர் ஆணையம் இரு தரப்பினரையும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.


அதன்படி, கடந்த 16-ம் தேதி காலை 10 மணி அளவில் ஜாய் கிரிசில்டா ஆஜரானதுடன், மாதம்பட்டி ரங்கராஜும் தனது மனைவி மற்றும் வழக்கறிஞர் ஸ்ருதியுடன் ஆணைய அலுவலகத்திற்கு வந்தார். இருவரிடமும் மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது, இரு தரப்பினரும் தங்களது விளக்கங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.


ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்த ஜாய் கிரிசில்டா


இப்படிப்பட்ட சூழலில், ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தான் நிறை மாத கர்பிணியாக இருப்பதால், ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஒவ்வொரு மாதத்திற்குமான பாரமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ், மாதம் தோறும் வழங்க உத்தரவிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம் தோறும் 6 லட்சத்து 50 ஆயிரம்(6,50,000) ரூபாய் பராமரிப்பு செலவுத் தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.